ஆக்கம்
களுவாஞ்சிக்குடி யோகன்
கடிதம் வந்திருந்தது.நாட்டிலிருந்து தங்கை அனுப்பியது.பிரித்து சாதரணமாகத் தான் படிக்க ஆரம்பித்தாள்.வாசித்து முடிந்ததும் அழுதே விட்டாள் யாமினி.கண்களிலிருந்து நீர் பெருக்கெடுக்கத் தொடங்கியிருந்தது.
நிறைந்த கண்ணீரோடு மீண்டுமொருமுறை அதை வாசிக்கத் தொடங்கினாள்.அக்கா,நாட்டுப் பிரச்சினை இன்னமும் தீர்ந்தபாடில்லை.அது தீர்ந்து மறுபடியும் சமாதானம் உருவாகுமென்ற நம்பிக்கையும் எம்மிடமிருந்து விட்டுப் போயிற்று.அப்படியான நிகழ்வுகள் இன்னமும் இங்கு நடக்கின்றன.
செல் விழுந்து அப்பாவிற்கு ஒரு கால் ஊனமானது உனக்குத் தெரியும்,அன்று இராணுவத்தினர் திடீரென ஊருகுள் புகுந்து விட்டார்கள்.அயலில் யாரும் இல்லை.பக்கத்து வீட்டுச் சின்னதங்க மாமி கூட பிள்ளைகளைக் கூட்டிகொண்டு ஓடி விட்டார்.அப்பாவைத் தனியாக விட்டு விட்டு என்னால் எப்படி ஓடமுடியும்,நான் வீட்டிலே ஒளிந்து கொண்டேன்.
வீட்டுகுள் நுழைந்த இரு இராணுவத்தினர் என்னைக் கண்டு விட்டனர்.அதில் ஒருவன் வந்து என் கைகளை இழுத்தான்.நான் திமிறினேன்.என் பலமெல்லாம் அவனுக்கு ஒரு தூசுபோலத் தானே.அவன் தவறான எண்ணத்தோடு மேலாடையைக் கிழித்துக் கொண்டான்.இதை பார்த்த அப்பாவால் எப்படி சும்மா இருக்க முடியும்?அவர் வைத்திருந்த ஊன்றுகோலால் அவனைத் தடுத்து தள்ளினார் ஆத்திரமடைந்த அவன் அப்பாவைப் பிடரியில் பிடித்துத் தள்ளி துப்பாக்கியால் அடிக்கத் தொடங்கினான் .மயங்கி கிடந்த அவருக்கு அப்பொழுதே உயிர் பிரிந்திருக்க வேண்டும்.
நான் அப்பாவை பார்பனோ?என்னைப் பாதுகாப்பனோ?தடுமாறி அவரின் மேல் விழுந்து சத்தமாக அழுது கொண்டிருந்தேன்.நான் போட்ட கூச்சலில் கடவுள் போல் இராணுவக் காமண்டர் ஒருவன் உள்ளே வந்தான்.
நடந்தவற்றை நேரில் கண்ட அவனுக்கு இரக்கம் வந்திருக்க வேண்டும்.ஆத்திரத்துடன் அவர்களை பார்த்து ஏதோ பேச அவர்கள் அமைதியாக வெளியேறிப் போனார்கள்.
அக்கா,அப்பாவின் உயிரைக் கொடுத்து தான் எனது மானத்தைக்......காப்பாற்ற வேண்டியிருந்தது இன்னுமொருமுறை மானத்தைக் காக்க எனக்காக இங்கு உயிரை விட யாருமேயில்லை.
இப்பொழுதெல்லாம் எனக்கு வாழ்க்கையில் எந்தவொரு பிடிப்புமே கிடையாது.ஜடமாகத் தான் இன்னமும் உலாவுகின்றேன்.அம்மா இறக்கும் போதே நானும் போயிருக்க வேண்டியவள்.எனது விதி இன்னமும் இந்த அவலங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றேன்..
இப்படியா தொடர்ந்தது அந்த நான்கு பக்கக் கடிதம்.
யாமினியும் சுவிசுக்கு வந்து மூன்று வருடங்களாகிறது அவள் வரும் போதே தாய் உயிருடன் இருக்கவில்லை.முதல் வருடமே "செல்" விழுந்து மாண்டு போனாள். தகப்பனின் துணையுடன் தான் ஒரே தங்கை பிரியா இருந்து வந்தாள்.அவர்களுக்கு யாழ்பாணத்தில் பெரியளவு சொந்தபந்தங்கள் இல்லை.
தகப்பனுட கூடப் பிறந்தவர் ஒருவர் .அவர் கொழும்பில் வாழ்கின்றார். அவருக்கு சொந்த பந்தங்கள் பற்றி அறிய ஆவலில்லை.தாயோ கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்.தகப்பன் இளைஞனாக இருந்த காலத்தில் மட்டக்களப்பிற்கு படிப்பிக்கப் போனபோது படிபித்த மாணவியையே மனைவியாக்கி கொண்டு அங்கேயே இருந்து விட்டார்.
அதனாலோ என்னவோ அங்கு இன்று வரை அவர்களுக்கு எந்தவித ஒட்டுறவும் கிடையாது.
இந்த மார்கழி வந்தால் பிரியாவிற்கு இருபத்தி மூன்று முடிகிறது.வாழவேண்டிய வயதில் எத்தனை துன்பங்கள் அவளுக்கு.தன்னந்தனியாக எத்தனை துன்பங்களை அனுபவிக்கின்றாள்.
யாமினிக்கு நெஞ்சு பதறியது.சகோதர பாசம் மேலோங்கக் குமுறினாள்.குமிறிக்கொண்டே அழுதாள்.கடிதம் கண்ணீரால் நனைந்து கொண்டிருந்தது.
யாமினி - சேகருக்கு ஒரே வாரிசு ஒரு வயசு சுவான்.அறையில் தூங்கி கொண்டிருந்தவன் எழுந்து அழத் தொடங்கினான்.குழந்தையின் அழுகை கேட்டவள் சட்டென நினைவுக்குத் திரும்பினாள்.கண்ணீரை கைகளால் துடைத்தவாறே எழுந்து போனாள்.குழந்தையை தூக்கி வந்து பால் கொடுக்கும் போது சுவரில் தொங்கியிருந்த குருவி பதினொரு முறை கூவி மெளனமானது .சேகர் வந்து விடுவார் சமைக்க வேணும் என உள் மனம் சொல்லியது.அப்போது மடியிலிருந்த சுவான் உறங்கியிருந்தான்.மறுபடியும் குழந்தையை தொட்டிலில் வளர்த்தியவள் திரும்பி வந்து சமையலறைக்கு போனாள்.
இரண்டரை போல் வேலையிலிருந்து சேகர் வந்தான்.வழமையான வரவேற்பு இல்லாத மனைவியை பார்த்து அவனுக்கு யோசனை.
"ஏன் முகத்தை உம்மென்று வைத்திரூக்கிறாய்?'
அவள் எதுவும் சொல்லாமல் கடிதத்தை கொடுத்தாள்.
வாசித்து முடிந்து நிமிர்ந்த போது மனைவியின் கண்களில் நீர்
பிரியமானவளின் கண்ணீரைப் பார்க்கச் சகிக்காதவனாய்,
"இதுக்கு நாங்கள் என்ன செய்யலாம்?"நீயே சொல்
என்றான்.
"என்ன செய்ய முடியும்?அவளை இங்கே கூப்பிடுறது தான்
ஒரே வழி"
'கூப்பிடுதெண்டால் விளையாட்டா?"சேகர் உணர்ச்சிவசபட்டு போனான்.
"எங்களுக்கு இருக்கிற பிரச்சினை எனக்கு தெரியும்.ஆனால் அவளுக்கு.எங்களை விட்டா வேற யார் இருக்கினம்?அதனாலையப்பா கடனோட கடனா அவளை இங்க கூப்பிடுவன்.இப்பவே சீட்டு ஒன்று ஆரம்பியுங்கோ.பிரியா வந்தாப் பிறகு சுவானை அவளிடம் விட்டுப் போட்டு நானும் வேலைக்குப் போறன்.அதனாலை கடனுகளை ஒரளவுக்கு சமாளிக்கலாம் "தகப்பன் இறந்த துக்கம் மனதில் இருந்தாலும் தங்கையை பற்றி நினைத்திருந்தனயெல்லாம் ஒப்புவித்தாள் யாமினி.
சேகர் எதற்கோ யோசித்தான்.ஆனால் யோசனை நீடிக்கவில்லை.சரி அவளை கொழும்பிற்கு வரச் சொல்லி கடிதம் எழுது என மனைவிக்குச் சொன்னான்.
இயந்திர வாழ்க்கையில் நான்கு மாத நான்கு நிமிடமாய் ஓடியது.
ஜரோப்பாவில் ஒரு கோடை காலம்.எதை பார்பது.எதை ரசிப்பது எனக் குழம்பிவிட்டாள் பிரியா. அந்தளவிற்கு அழகாகவும் வளமாகவும் செழித்திருந்தது சுவிற்சலாந்து.
எதிர்பார்த்ததை விட ஒரு படி உயர்ந்திருந்தது அவள் வந்திறங்கிய நாடு.
பிரியா அக்கா குடும்பத்துடன் அறையில் அமர்ந்திருந்தாள்.தனக்கு நேர்ந்த துக்கங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தாள்.அப்போது யாமினி கணவரிடம்
'நாளைக்கு லீவு எடுக்கிறீங்களா?"என்று கேட்டாள்.
லீவா?எதற்கு?
இவளை பொலிசில் பதிய வேணும்.
'இதோபார்.பிரியா இங்கு வந்ததோடை என்னடை கடமை முடிஞ்சு போச்சு.
நீயே இனி எல்லாத்தையும் கவனிச்சு கொள்.நான் இவளைக் கூட்டிக்கொண்டு போக அதை பார்த்த எங்கட சனம் நாலு கதை கதைக்க.
இதெல்லாம் வேண்டாமப்பா.ஒதுங்கிக் கொண்டான் சேகர்.
'சரி.நானே கவனிக்கிறேன்'என்றாள் யாமினி.
நாட்கள் மிக வேகமாக ஓடுகிறதென்று தான் சொல்லத் தோன்றும்.பிரியா வந்தே நான்கு மாதமாகிவிட்டது யாமினியும் வேலைக்குப் போக தொடங்கியிருந்தாள்.அவள் காலையில் போய் மாலையில் வீடு திரும்புவாள்.சேகர் நான்கு மணித்தியால ஓய்வுக்கு வீடு வந்து திரும்பவும் போவான்,இந்த நேரம் அத்தானும் அக்காவும் பிரியாவிற்கு மாப்பிள்ளையும் பார்க்கத் தொடங்கியிருந்தார்கள்.
அன்றைக்கு சேகர் வேலை முடிந்து வந்தான்.அவனுடன் ஒரு வாலிபனும் கூட வந்திருந்தான்.அவனுக்கு வி.ஜ.பி வரவேற்புக் கொடுத்தாள் யாமினி.சேகரும் அவளும் சாப்பாடும் கொடுத்தனுப்பினார்கள்.
அந்த இரவே யாமினி தங்கையிடம் கேட்டாள்.
'இப்போ வந்தவனை பற்றி என்ன நினைக்கிறாய்?'
அவள் பதிலுக்கு காத்திராத சேகரும்
'அவனை உனக்குப் பிடிச்சிருக்கா"என்று விசாரித்தான்.
அப்பொழுது தான் பிரியாவிற்குத் தெரிந்தது அவன் தன்னைப் பார்க்கத் தான் வந்திருகிறானென்று
அவனை அவளுக்குப் பிடித்துத் தான் இருந்தது,அகன்ற விழிகள்.அரும்பான மீசையுடன் செக்கச் செவேலென அடக்காமாக இருந்தான்.எந்த பெண்ணுக்கும் அவனை வெறுக்கத் தோன்றாது.
ஆனால் திடீரெனக் கேட்டதும் கூச்சபட்டுப் போனாள்.எதுவும் கதைக்கவில்லை.நாணத்துடன் நிலம் பார்த்தாள் இதை புரிந்து கொண்ட யாமினி.
இதிலென்னப்பா அவளுக்கு விருப்பு வெறுப்பு.நாங்களென்ன அவளைப் படுகுழியிலா தள்ளப் போறம்.நீங்கள் மேற்கொண்டு அவனுடன் கதையுங்கோ"என்றார்.
அன்றைக்கு காலநிலை அவ்வளவு நன்றாக இல்லை.
பன்னிரென்டு மணிக்கு முன் உடம்பைச் சுட்டெரிக்கும் வெயிலாக கொழுத்தியது.பிற்பாடு பனிகொட்ட ஆரம்பித்திருந்தது.சாப்பிட சேகர் நேராகக் கட்டிலில் போய்ப்படுத்திருந்தான்.
"அத்தான் சாப்பிடேல்ல"போய்க் கேட்டாள் பிரியா.
'பசியில்லை தலையிடிக்குது"என்றான் அவன்.
அலுமாரிக்கு வந்து மாத்திரை எடுத்தாள்.மீண்டும் போய்'இந்தாங்க அத்தான் பனடோல்'நீட்டினாள்.
கட்டிலிருந்து எழுந்த சேகர் ஒரு கையால் பனடோலை வாங்கினான்.அடுத்த கையால் பிரியாவின் இடது மணிகட்டை இறுக்கமாகப் பிடித்து இழுத்தான்,இதை கடுகளவும் எதிர்பார்க்காத அவள் கலங்கிபோனாள்.
ஆத்திரமான தயக்கத்துடன் கையை உதறிவிட்டவள் வெளியே வந்து சுவானைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள்.உடம்பெல்லாம் நடுங்கியது.அப்போது சுவான் அழ ஆரம்பித்து விட்டான்.அவளைத் தொடர்ந்து சேகரும் வெளியே வந்தான்.அவளது இடுப்பிலிருந்த சுவானின் முதுகைத் தடவினான்.அதே கை அப்படியே பிரியாவின் முதுகுப்பகுதியை தழுவத் தொடங்கியது.சேகரின் நடவடிக்கைகளை வித்தியாசமாகத் தெரிய "அத்தான்" என்று கத்தினாள் அவள்.ஆமாம் நான் அத்தானே தான் தலையாட்டியவாறு இழிவாகச் சொன்னான் அவன்.
அவனது வாயிலிருந்த வந்த அற்ககோல் மணம் அவளது நாசியைத் துளைத்தது.அவளை பயம் கவ்வத் தொடங்கியது.சுவானுடன் மெதுவாக நகர்ந்து தனது றூமிற்குள் நுழைய முனைந்தாள்.
சேகர் அவளுக்கு முன்னான் அவளது அறைக்குள் புகுந்து கொண்டான்.கதவை இழுத்து மூடி சாவியையும் கையிலெடுத்தான்.
"ஏன் கதவை மூடுகிறீர்கள்?"அவளுக்கு நாக்குத் தழுதழுத்தது.
'தெரியல்ல உனக்கு அடுத்த மாதம் கல்யாணம் நிச்சயமாகியிருக்கு"
'அதுக்கு' கலங்கினாள் அவள்.
அதுக்கு முதல் நீ எனக்கு வேணும்,ஒரேயொரு தடவை நீ வேணும் என்றவன் அவளைக் கட்டிப்பிடிக்க முனைந்தான்.அவனது கண்கள் சிவந்து ஒரு மிருகத்தனம் சுடர்விட்டது.
பிரியா என்று கத்தியவாறு அவளைத் துரத்தினான்.அக்கா என நடுக்கத்துடன் கதறினாள் அவள்.அப்போது வெளியில் ரெலிபோன் அலறியது.கதவைத் திறந்து வெளியேறியவன் மீண்டும் பூட்டிவிட்டு ரெலிபோனை தூக்கினாள்.
'என்னங்க நான் யாமினி கதைக்கிறன்.சாப்பிட்டீங்களா?"
மனைவி கேட்டாள்.
'இனித்தான் சாப்பிடப்போறன்'
என்றான் மெதுவாக 'பிரியா எங்க அவளை வரசொல்றியளா?"
அவளும் சுவானும் நல்ல நித்திரையிலிருக்கிறார்கள் எழுப்பி விடவா என்று கேட்டான்.
'இல்லை தேவையில்லை,இன்றைக்கு வெள்ளிகிழமை நான்வேலை முடிந்து வரும் போது அவளையும் சுவானையும் வெளிகிட்டு இருக்கச் சொல்லுங்கோ கோயிலுக்குப் போகவேணும்"
சரி என்று சேகர் ரெலிபோனை அடித்து வைத்தான்.
திரும்பவும் மிருகத்தனம் அவனுள் தீ போல் மூண்டது ஆவேசமாகத் கதவைத் திறந்து மீண்டும் மூடினான்.
உள்ளே சுவானை அணைத்தவாறு கட்டிலிருந்து அழுது கொண்டிருந்தாள் பிரியா.அவனைக் கண்டதும் சட்டென எழுந்து கொண்டாள்.
அவளை நெருங்கி இடுப்பிலிருந்து மகனைப் பறித்து கட்டிலில் எறிந்தான்.அந்தப் பிஞ்சு மூச்சு முட்ட அழத்தொடங்கியது.பிரியாவிற்கு மரண பயம் எழுந்தது.ஏன் என்னை இங்கே கூப்பிட்டனீங்கள்?அங்கேயே சாகவிட்டிருக்கலாமே.
தலையிலடித்துக் கொண்டு கதறினாள்.
இந்தக் கதறல்கள் ஒன்றும் அவனின் காதில் ஏறவில்லை முதலில் அவளை அடையவேண்டும் என்ற வேகம் தான் அவனுள் உக்கிரமானது.
ஒரே உந்தலில் பாய்ந்தவன் பிரியாவை பிடித்துக் கட்டிலில் தள்ளினான்.இனி இந்த மிருகத்திடமிருந்து தப்ப முடியாது என உணர்ந்த அவள்.ஒட்டு மொத்தமாக பலத்தை திரட்டி அவனைத் தள்ளினாள்.
எத்தனையோ இன்னல்களுக்கு நடுவில் அப்பாவின் உயிரை பலிகொடுத்து அந்த இராணுவத்திடமிருந்து காத்தமானம்;பசுத்தோல் போர்த்திய இந்த மிருகத்திடம் இழப்பதா?கூடவே கூடாது.
நாட்டிலுள்ள இராணுவங்களை படைகொண்டு அழித்து சமாதனத்தை உருவாக்கினாலும் உருவாக்கலாமேயொழிய தஞ்சம் புகுந்த நாட்டில் இலை,மறைகாயாவுள்ள பகுதறிவற்ற இந்த மிருகங்களை அழிப்பதென்னவோ முடியாத காரியம் தான்.இருந்தும் இவர்களை இனங்கண்டு அழித்து என்னைப் போன்ற அபலைகளைக் காப்பதற்கு யாரேனும் முன்வரமாட்டர்களா?எனத் தனது மனதினுள் ஆதங்கத்தை நினைத்தவளுக்கு அந்த ஒன்பது மாடிக்கட்டிட அறையின் ஜன்னல் தான் கண் முன் தோன்றியது.ஒரே நிமிடத்தில் திறந்தாள்.
அக்கா........" என்ற கூச்சலுடன் வெளியே குதித்து கொண்டாள் பிரியா.
ஆக்கம்
களுவாஞ்சிக்குடி யோகன்
அப்ப நான் வரட்டா!!