களவாஞ்சிகுடி யோகன்..!!

அலுவலக மாதந்தம் கூட்டத்தில் இருந்த போது தான் அந்த அழைப்பு.கைத் தொலைபேசியைத் தூக்கி இலக்கங்களை பார்த்தான் "பிறைவேற்" என்று விழுந்திருந்தது.பட்டனை அழுத்தி "கலோ" என்ற பொழுது மறுமுனையில் தெய்வேந்திரன் அங்கிள்.
"எப்படியிருக்கிறீர்கள் தம்பி?" கேட்டார்.சுகத்தைக் கூறி என்ன விஷயம் அங்கிள்?" என்று விசாரித்தான் செல்வன்.
"இந்த சனி ஞாயிற்கு ஏதாவது அலுவல்கள் இருக்கிறதோ?"
"ஏன் அங்கிள்?"
"ஒருக்கா வீட்டுக்கு வாங்கோ கதைக்க வேணும்."
தொலைபேசியைத் துண்டித்துவிட்டு கூட்டத்திலே கவனம் செலுத்தத் தொடங்கினான்.கூட்டம் முடிந்த பின்னர் தெய்வேந்திரன் அங்கிள் ஞாபதிற்கு வந்தார்.அவரோடு செல்வனுக்கு பன்னிரன்டு வருடப் பழக்கம்.செல்வன் அவுஸ்ரெலியா வருவதிற்கு ஊக்குவித்த நண்பன்,அவன் இங்கு வந்திறங்கிய பொழுது "சிட்னி" மாநிலதிற்கு வேலை பெற்று போயிருந்தான்.ஆனாலும் அவனின் நண்பனின் நண்பனொருவன் அவனுக்குச் சில அடிப்படை உதவிகளைச் செய்து கொடுத்தான்.அந்த உதவியால் முதன் முதலில் வாடகை வீடோன்றுக்கு போன போது,பக்கத்துக் குடியிருப்பில் தெய்வேந்திரன் அங்கிளின் வீடு."ஊரிலே" டிப்போ ஒன்றில் வேலை செய்தவர்,கொஞ்சம் புளுகுதான் ஆனாலும் உதவி செய்யும் மனபான்மை உள்ளவர்."என்று அங்கிளை பற்றி அறையில் உள்ள சிநேகிதர்கள் செல்வனுக்குச் சொன்னார்கள்.புதுப் பொடியன் ஒருவன் வந்திருக்கிறான் என அறிந்து செல்வனைக் காண அங்கிள் வந்தார்."டை" அடித்த தலையிலே தொப்பியொன்றை அணிந்திருந்த அவர்,கதைக்கும் பொழுது பரஸ்பர அறிமுகத்திற்கும் பின்னர்,ஊரிலுள்ள பலரது பெயர்களைக் கூறியவர்களில் சிலரைத் தான் செல்வனுக்கு தெரிந்திருந்தது.ஆனாலும்,"நீர் நமது பிள்ளை தான்,உமக்கு என்ன உதவிகள் தேவைபட்டாலும் தயங்காமல்வாரும்."என்று கூறிவிட்டுப் போனார்.
பின்னாளில் செல்வன் படித்து,வேலை பெற்று புது இடத்திற்கும் போய்விட்டான்.அங்கிளும் புதுவீடு வாங்கிக் கொண்டு பிறிதொரு ஊருக்கும் போயிருந்தார்.அப்படியிருந்து??் இருவருக்குமிடையில் தொடர்பு இருந்து கொண்டுதானிருந்தது.இரண்டு மாதங்களுக்குமுன் அங்கிள் தம்பதியினரின் திருமண நிறைவு நாள் கொண்டாட்டம்.செல்வனுக்கும் அழைப்பு.பரிசுப் பொருட்களோடு சென்று வாழ்த்திவிட்டு வந்தான்.
"அங்கிள் அலுவல்கள் இல்லாமல் அழைக்கமாட்டர்,ஞாயிற்றுக் கிழமை போனால் தெரிந்துவிடும்."நினைத்து கொண்டான்.பின்னேர வெயில் மறைந்துபோயிற்று,அங்கிளின் வீட்டுக்கும் போக ஆயத்தமாகிக்கொண்டிருந்த போது அழைப்பு மணி ஒலித்தது.செல்வன் கதவை திறந்தான்.வெளியே புருஷோத்....
"வா மச்சான்,உனக்கு கல்யாணமெல்லாம் முற்றாகியிருக்குதாம்."
"ஓமடா,கல்யாணமென்று ஏற்பாடு பண்ணியாட்டி,காசு தான் கையில் இல்ல,அது தான் உன்னட்டக் கொஞ்சம் மாறலாமென்று வந்தனான்."
"போன கிழம தான் ஊருக்கு காசு அனுப்பினனான்,இப்ப என்னட்ட காசு இல்லை மச்சான்."செல்வன் கூறினான்.
"இல்லடா செல்வா,உன்னை நம்பி தான் வந்தனான்,நீ சீட்டும் எடுத்த நீ என்று கேள்விபட்டனான்,எப்படியோ மாறியெண்டாலும் உதவி செய் மச்சான்."
செல்வன் ஆச்சரியபடும் விதத்தில் புகைபடத்திலே அந்தை பெண் அழகாய்த் தெரிந்தாள்.அவனுக்குப் பிடித்த பச்சை நிறத்தில் சேலை உடுத்திருந்தாள்.குங்குமப்பொட்டோடும் திருத்தமான அவயங்களோடு தெளிவாய்த் தெரிந்தாள் அவள்.புகைபடத்தைப் பார்த்து அவன் சற்றுத் தடுமாறியது உண்மை.
"என்ன சொல்கிறீர்?" தெய்வேந்திரன் அங்கிள் கேட்டார்.
"என்னுடைய முடிவு மட்டும் இறுதி முடிவு இல்லை அங்கிள்.ஊரிலும் கேட்க வேணும்,
அதுவும் சரியென்றால் நான் ஊருக்கு போக இருக்கிறன்,போகிற போது இந்தப் பெண்ணைச் சந்தித்து இருவரும் மனம் விட்டுக் கதைத்து,விருப்பு வெறுப்புகளைப் பகிர்ந்து,இருவருக்கும் பிடித்துச் சம்மதம் என்று வந்தால் செய்யலாம் ஆனால் அதற்கிடையில் என்னைவிட நல்ல வரன் அமைந்தால் நீங்கள் செய்து கொடுங்கள் பிரச்சினையில்லை."என்றான் செல்வன்.
"எப்ப மட்டில் ஊருக்கும்போக இருக்கிறீர்?"அங்கிள் கேட்டார்,
செல்வன் குறிப்பாக போகும் நாள் பற்றி சொன்னான்..
"நீர் ஊருக்கு போய் பார்த்து முடிவு சொன்ன பிறகு தான் நாங்கள் வேறு வரன் பாக்கிறதப் பற்றி யோசிப்பன்,என்னப்பா?"என்று ஆன்ரி,அங்கிளின் துணையோடு சொன்னாள்.இருவரும் புறப்ப்ட ஆயத்தமானார்கள்..
"இவ்வளவு வசதியான வீட்டில் நீர்மட்டும் தனியாகவா இருக்கிறீர்?,அதுவும் இந்த இடத்தில்?"புறபடும் போது அங்கிள் இரண்டு தடவைகள் கேட்டார்."ஏன் அங்கிள் திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள்,தனியாக இருந்துவிட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்கலாமல்லவா?"என்று சொல்லி விட்டான் செல்வன்..
ஒரு சனி கிழமை மதியம்.கல்யாண வீடொன்றில் செல்வன் சாப்பிட்டு கொண்டிருந்தான்.அப்பொழுது அங்கிளின் தொலைபேசி அழைப்பு.
"உம்மை பெண்வீட்டாருக்கும் பிடிக்கவில்லையாம்,அதனால் இந்த சம்பந்தத்தை நாங்கள் கைவிடுவோம்."என்று கூறிவிட்டுத் தொலைபேசியை துண்டித்துக் கொண்டார்.
அங்கிளின் அன்புபிடியிலிருந்து விடுபட்டதில் செல்வனுக்கு ஓரளவு நிம்மதி ஆனாலும் என்ன காரணமாக இருக்க கூடும் என்ற நினைப்பு நெஞ்சிலே எழுந்தது."ஒருவனை என்னைவிடத் தகுதியான மாப்பிள்ளை அவர்களுக்கு கிடைத்திருக்க கூடும்."என்ற ஜதார்த்த சிந்தனையோடு அதை பற்றி மறந்திருந்தான்.
முருகன் கோவிலின் கும்பாபிஷேகத் தினம்.அலையலையாக மக்கள் கூட்டம்.செல்வனும் அந்த கூட்டத்தில் ஒருவனாக நின்றான்,நிர்மல மூர்த்தி அண்ணணும் கோவிலிலே தென்பட்டார்.குடும்பத்தோடு அவர் சாமி கும்பிட வந்திருந்தார்.பல மாதங்களுக்கு பின் இருவரும் சந்திக்கிறார்கள்.
"எப்படி இருக்கிறீர் செல்வா?தெய்வேந்திரன் அங்கிள் கல்யாணமெல்லாம் பேசினவராமே?கேள்விபட்டேன்?"நிர்மலமூர்த்தி அண்ணன் கேட்டார்.அங்கிளோடு நெருங்கி பழகுபவர் நிர்மல மூர்த்தி அண்ணன்.அவருக்கு விஷயம் தெரிந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டான் செல்வன்.ஆரம்பம் முதல் இறுதி வரை நிகழ்ந்தவற்றை அவருக்கு சொன்னான்.
"பெண் வீட்டார் யாரும் உம்மை வேண்டாமென்று செல்லவில்லை அங்கிளுக்கு உம்மேல சந்தேகம்,அந்த இடத்தில் நீர் தனியாக வசிக்கிறீராம்,ஏன் இவர் தனியாக இருக்க வேண்டும்,நிறைய பெட்டைகளோடு இவருக்குத் தொடர்பு இருக்க வேண்டும்,அது தான் தனியாக இருக்கிறார் என்பது அவரின் கணிப்பு.அது போக நீர் இருக்கும் ஏரியாவில் விலைமாதர் விடுதியும் இருகிறதாம்,நீர் அங்கேயும் அடிக்கடி போய்வரக் கூடுமாம்,இந்தச் சந்தேகங்களோடு புருஷோத்திடமும் கேட்டிருக்கிறார்,அவனுக்கு உம்மீது என்ன கோபமோ தெரியாது,செல்வனுக்கு நிறைய பெட்டைகளோடு தொடர்பு இருக்கிறது தான் அங்கிள் அது தான் அவன் தனியாகவே இருக்கிறானென்று அவனும் சொல்லியிருக்கிறான்,அதனால் தான் அங்கிளே உனக்கு இந்த முடிவைச் சொல்லியிருக்கிறார்."
நிர்மலமூர்த்தி அண்ணணின் கதையை கேட்டுச் செல்வனுக்குக் கோபம் வரவில்லை.சிரிப்பு தான் அதிகம் வந்தது.ஆனாலும் புருஷோத்தும் இப்படி சொல்லியிருக்கிறானே என்று தான் வேதனை.
"கல்யாணதிற்குப் பண உதவி செய்யவில்லையென்பதற்காக இப்படிச் சொல்லியிருக்கிறான்,இவனெல்லாம் ஒரு சினேகிதன்."அலுத்துக் கொண்டான் செல்வன்.
மழைதூறி கொண்டிருக்கிற மாலைபொழுது அது.காதுமடல்களைக் கூட விறைக்க வைக்கும் குளிர்காற்று வீசிக்கொண்டிருக்கிறது.செல்வன் வானொலிப் பணி முடிந்து திரும்பி கொண்டிருந்தான். அந்தப் பாதையால் அவன் போக்குவரத்துப் பண்ணுவதென்பது அபூர்வம், உண்மையில் அப்பாதையால் வந்தால் அவனின் வீட்டை குறுகிய நேரத்திற்குள் அடைந்துவிட முடியும். ஆனாலும் அவன் அதை உபயோகிப்பது குறைவு. அந்தப் பாதையில் தான் விலைமாதர் விடுதியொன்று இருக்கிறது..
அதானால் அதைத் தவிர்த்துவிடுவான் செல்வன்..
அன்று அவசரமாகத் தொலைபேசி அழைபொன்று ஊரிலிருந்து வர வேண்டியிருந்ததால் அந்த பாதையினூடாக வீட்டை நோக்கிக் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.முன்னோக்கிய வாகனங்களின் தாமதத்தினால் அவனும் காத்து நிற்க வேண்டிய நிர்பந்தம்.
காரை நிறுத்தியிருந்த பொழுது செல்வன் கண்ட காட்சி அவனின் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை.தெய்வேந்திரன் அங்கிள் விலைமாதர் விடுதிக் குள்ளிருந்து வந்து கொண்டிருந்தார்.முன் வாயிலுக்கு வந்தவர் றோட்டில் இரண்டு பக்கத்தையும் பார்த்து விட்டு,கையிலிருந்த தொப்பியை தலையிலே அணிந்தபடி கட கடவென்று தனது காரைநோக்கி நடந்து கொண்டிருந்தார்,அக்காட்சியை செல்வனால் ஜீரணிக்கவே முடியவில்லை.
"உள்ளம் ஏனோ குமுறிக் குழம்பியது"...
"தங்களிடமுள்ள அழுக்கான எண்ணங்களும் அழுக்கான குணங்களும் மற்றவர்களிட்டமும் தென்படும் என்ற தவறான கணிப்பு.எவ்வளவு தவறான கணிப்பு இது..மாபெரும் தவறானது இந்த கணிப்பு என்று இவர்கள் இனி எப்பொழுது உணர்ந்து கொள்ள போகிறார்கள்.உணராவிட்டால் கூட இவர்களையெல்லாம் என்ன தான் செய்து விட முடியும்,இப்படியானவர்களுக்க??எல்லாம்
வெட்கமில்லை?"
வீட்டுக்கு வந்து சேர்ந்த போது செல்வனின் மனம் அமைதியின்றியே இருந்தது..
(எமது அனுமதியின்றி இவ் ஆக்கத்தை பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம் உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி)..
ஆக்கம் -
களவாஞ்சிகுடி யோகன்!!
அப்ப நான் வரட்டா!!








1 comment:
I would like to thank you for the efforts you have made in writing this article.
seo company
Post a Comment